INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Thursday, 18 December 2014

ஹார்ட் ட்ரைவ் தூங்குகிறதா?

27a9g8r.jpg

பல நேரங்களில், நாம் கம்ப்யூட்டரில் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல், வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது ஹார்ட் ட்ரைவ் என்ன செய்திடும்? அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா? அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது? இந்த கேள்விகள் மனத்தில் எழுந்தாலும், நாம் பதில் காண முற்படுவதில்லை. இந்த சூழ்நிலைகளை இங்கு சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

நாம் கம்ப்யூட்டரை விட்டு சற்று விலகிச் செல்கையில், கம்ப்யூட்டர் நாம் மீண்டும் வந்து பணியினைத் தொடங்க காத்திருக்கிறது. ஆனால், காத்திருக்கும் அந்த நேரத்திலும் அது வழக்கமான தன் வேலையினை மேற்கொண்டு தான் உள்ளது. இந்த வேலைகளை மேற்கொள்ள அதனை இயக்கும் வகையில் யாரும் தேவை இல்லை. எனவே, கம்ப்யூட்டரின் திறன், நீங்களாக அதனை இயக்கும் வகையில், பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியானால், நாம் மறுபடியும் வந்து, மீண்டும் நம் பணியைத் தொடரும்போது, ஹார்ட் ட்ரைவில் மேற்கொள்ளப்படும் வேலை அப்படியே நின்றுவிடுமா? ஆம், அப்போதைக்கு அது ஒத்தி வைக்கப்படும். ஏனென்றால், நாம் தொடரும் வேலையினை மேற்கொள்ள. அப்படி என்ன வேலையை அது பார்த்துக் கொண்டிருந்தது. அதனை நாம் கண்காணித்து அல்லது தேடிப் பார்க்க இயலுமா? முடியாது. ஹார்ட் ட்ரைவில் நாம் இல்லாத போது, மேற்கொள்ளப்பட்ட பணியினை நாம் கண்டறிய முடியாது. அப்படியானால், அந்தப் பணிகள் தான் என்ன? இங்கு பார்க்கலாம்.


பின்னணியில் அப்படி என்னதான் நடக்கிறது?கம்ப்யூட்டரை நாம் இயக்காத போது, சில பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும், அவை எப்படி செட் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும் பொறுத்தது. இருப்பினும், சில பொதுவான பின்னணி வேலைகளை இங்கு காணலாம்.


பைல் வகைப்படுத்தல் (Indexing)

தற்போது வரும் அனைத்து கம்ப்யூட்டர்களில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும், தங்களிடம் சேரும் பைல்களை வகைப்படுத்தும், file-indexing, வேலையை மேற்கொள்கின்றன. ஹார்ட் ட்ரைவ் முழுவதும் ஊர்ந்து சென்று, ஒவ்வொரு பைலையும், அதன் வகை மற்றும் அதில் என்ன எழுதி உள்ளது எனவும் பார்க்கின்றன. பார்த்து தனக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு டேட்டா கட்டமைப்பினை உருவாக்கி வைத்துக் கொள்கின்றன. நாம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள தகவல் தேடித்தரும் டூலைப் பயன்படுத்துகையில், இந்த டேட்டா கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பினை எப்போதும் மேம்படுத்தப்பட்ட நிலையில் வைத்திட, ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களை, இந்த வகைப்படுத்தும் டூல், தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று ஆய்வு செய்து, மாற்றங்களை பதிந்து வைத்துக் கொள்கிறது. இந்தப் பணி தான் தொடர்ந்து நடைபெறுகிறது.



டிஸ்க் டிபிராக் (Disk defragmentaion)

ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களைத் தொடர்ச்சியாக ஹார்ட் ட்ரைவில் அடுக்கி வைத்திடும் வேலையே, டிஸ்க் டிபிராக் என அழைக்கப்படுகிறது. விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகையில், அனைத்து பைல்களையும் மூடி வைத்த பின்னரே, டிஸ்க்கினை டிபிராக் செய்திட முடியும். ஆனால், புதியதாக வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இந்த டூல் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. நாம் பைல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்கள் அனைத்தையும் டிபிராக் செய்திடும் பணியை, ஹார்ட் டிஸ்க் மேற்கொள்கிறது. இந்தப் பணி, கம்ப்யூட்டரில் வேலை எதுவும் மேற்கொள்ளாத போது செய்யப்படும் வகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் எந்த வேலையையும் மேற்கொள்ளாமல், கம்ப்யூட்டரை விட்டு சற்று நேரம் விலகி இருக்கையில், இந்த பணி நிச்சயம் மேற்கொள்ளப்படும்.



ஆண்ட்டி வைரஸ் சோதனைப் பணி

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும், கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பு வழங்கும் மற்ற புரோகிராம்களும், குறிப்பிட்ட கால அவகாசத்தில், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நாம் அமைத்திருப்போம்; அல்லது மாறா நிலையில் அதுவே அமைத்துக் கொண்டிருக்கும். இந்த பணிகள், நாம் கம்ப்யூட்டரில் எந்த வேலையும் மேற்கொள்ளாதபோதும் செயல்படுத்தப்படும். 


பேக் அப் (Back up files)

தானாக நம் பைல்களுக்கு பேக் அப் அமைக்கும் பணியினை நாம் அமைத்திருந்தால், பைல்களைப் பேக் அப் செய்து நகல்களை எடுத்து வைக்கும் பணி, நாம் கம்ப்யூட்டரை விட்டு விலகுகையிலும் மேற்கொள்ளப்படும். 


தானாக அப்டேட் செய்தல் (Automatic update)

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் போன்றவை தாங்களாகவே அப்டேட் செய்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் வேலை செய்யாதபோது, ஹார்ட் ட்ரைவ் வேலை செய்வதாக நமக்கு அடையாளம் காட்டப்பட்டால், இந்த சிஸ்டம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களை அப்டேட் செய்வதற்காக பைல்களைத் தரவிறக்கம் செய்து கொண்டிருக்கலாம்.மேலே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம், ஹார்ட் டிஸ்க் மேற்கொள்ளும் சில தொடர் பணிகள் தான். இன்னும் பல பணிகளை, ஹார்ட் ட்ரைவ் தானாகவே மேற்கொள்ளும் வகையில் விண்டோஸ் இயங்கும். இவற்றைக் காண டாஸ்க் மானேஜர் திறந்து, Disk header கிளிக் செய்து, அப்போதைக்கு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் செயல்பாடுகளைக் காணலாம். 

விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், டிஸ்க் ஹெடர் பிரிவினைக் காண இயலாது. இதில் Performance டேப் கிளிக் செய்து, “Open Resource Monitor” தேர்ந்தெடுத்து, ஹார்ட் ட்ரைவ் மேற்கொண்டிருக்கும் பணிகளைக் காணலாம். Resource Monitor விண்டோவில், Disk டேப் கிளிக் செய்து, செயல்பாடுகளின் வரிசையைக் காணலாம். விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களிலும், Resource Monitor விண்டோ கூடுதல் தகவல்களைத் தரும்.

டிஸ்க்கில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பதிவு செய்து, பின் ஒரு நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டால், Process Monitor பயன்படுத்தலாம். இதனைச் செயல்படுத்தி, கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் விலகிச் சென்றால், ஒருவரும் பயன்படுத்தாத போது, ஹார்ட் ட்ரைவ் மேற்கொள்ளும் பணிகளைக் காணலாம். ப்ராசஸ் மானிட்டர், பல வகை செயல்பாடுகளைப் பதிவு செய்திடும். எனவே, டூல்பாரில் உள்ள பட்டன்களைக் கிளிக் செய்து, பைல் சிஸ்டம் அமைப்பில் உள்ள பைல்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை மட்டும் பதிவு செய்திடும்படி செட் செய்திடலாம்.

எனவே, நீங்கள் பயன்படுத்தாத போது, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் செயல்படுவதனை அதன் எல்.இ.டி.விளக்கு எரிந்து காட்டினால், கவலைப்பட வேண்டாம். சில நல்ல தேவையான பணிகளே மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைதியடையவும். அப்படியும் வைரஸ் அல்லது மால்வேர் எனச் சந்தேகப்பட்டால், உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் கொண்டு, ஒரு முறை முழுமையாக ஸ்கேன் செய்திடவும்.

Popular post