INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Thursday 18 December 2014

நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்

தூங்கும் குழந்தை
நாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணூம் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா? ஆம், என்கிறார்கள் பெரியவர்கள்.

கனவு எப்படி வருகிறது?

அறிவியல் முறைப்படி:
நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனக்குழப்பம் அதிகமாக இருந்தாலோ நமக்கு அடிக்கடி கனவு வரும்.
நினைவுகளே கனவு:
சிலருக்கு தாங்கள் பார்த்த திரைப் படங்கள் அப்படியே கனவாக வரும். நாம் என்ன நினைத்துக்கொண்டு தூங்குகிறோமோ அதுவே கனவாகவும் வரலாம். உதாரணத்திற்கு, ஒரு மாணவன் "நாளைக்கு தேர்வுக்குப் படிக்கவில்லையே, எப்படி எழுத்தப்போகிறோமோ" என்று எண்ணிக்கொண்டு தூங்கினால், அவனுக்கு தேர்வு எழுதுவது போன்றும், அதில் தேர்ச்சி பெறாதது போன்றும் கனவு வரலாம். இந்த மாதிரி கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இல்லை.
மத நம்பிக்கையின் படி:
கடவுள், அவரை வேண்டிக்கொள்பவர்களுக்கு கனவு மூலமாக சிலவற்றை தெளிவுபடுத்துவார். பிரியமானவர்களிடம் கனவு மூலம் பேசுவார். பிற்காலத்தில் நடக்கப் போகும் தீங்கை காட்டி எச்சரிப்பார்.
உதாரணமாக, பைபிளில் ஏரோது என்னும் மன்னன் குழந்தை ஏசுவை கொள்ள தேடிக்கொண்டிருந்தபோது, அவரது தந்தை சூசைக்கு கனவில் தேவ தூதன் தோன்றி எச்சரித்து எகிப்துக்குச் தப்பிச் செல்லும்படி கூறினான். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் அந்த மன்னன் இறந்த பிறகு மீண்டும் அதே தேவ தூதன் சூசையின் கனவில் வந்து, ஏரோது இறந்துவிட்டான் என்பதையும் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம் என்பதையும் கூறினான். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

சில கனவுகள் மற்றும் அதன் அர்த்தங்கள்:

பெரியவர்கள் சிலர் ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தம் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். அவற்றை தொகுக்க எடுக்கப்பட முயற்சிதான் இக்கட்டுரை.
சில வயதானவர்களிடம் கேட்டறிந்து பின்வரும் சில கனவுகளையும் அதன் அர்த்தங்களையும் எழுதுகிறேன்.
நல்ல கனவுகள்:
· பால் வாங்குவது போன்று கனவு கண்டால், நமக்கு வரவு, நல்ல சம்பவம், மன மகிழ்ச்சியான நிகழ்ச்சி அல்லது வாழ்கையில் முன்னேற்றம் நடப்போகிறது என்று அர்த்தம்.
· தலையில் பூச்சூடுவது போன்ற கனவு-குடும்பத்தில் அமைதி மற்றும் நிம்மதி.
· பழம் சாப்பிடுவது- ஒரு செயலின் வெற்றியை குறிக்கிறது.
· கனவில் சாவு விழுந்தால் சுப நிகழ்ச்சி (திருமணம் போன்றது) நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
· நம் கையில் உள்ள பணத்தை யாருக்காவது கொடுத்துவிட்டால், நம்மிடம் உள்ள வியாதிகள் நீங்குகிறது என்று அர்த்தம்.
· நம் தலை முடி நிறைய இருப்பது போன்ற கனவு- நாம் சந்தோஷமாக இருப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.
· கனவில் பூ வாங்கினாலும் நல்லது. நமக்கு வரவு இருக்கிறது என்று அர்த்தம்.
· நாம் உயரப் பறப்பது போன்று இருந்தால், நமது வாழ்கையில் பிரச்சினைகளில் இருந்து துரிதமான முன்னேற்றம் அடையப் போகிறோம் என்று பொருள்.
· படிக்கட்டு ஏறினாலோ அல்லது உயரமான பகுதிகளுக்கு ஏறினாலோ, நாம் பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக முன்னேறி வருகிறோம் என்று அர்த்தம்.
· கனவில் யாரேனும் இறந்தால், அவர்களுக்கு ஆயுள் கெட்டி என்று அர்த்தம்.
· வீட்டில் விளக்கு எறிதல் - குடும்பம் என்ற விளக்கு நன்றாக இருக்கிறது.
· பேருந்தில் அல்லது ஏதேனும் ஒரு வாகனத்தில் பயணம் செய்யும்போது, வழியில் இறங்கிவிட்டதைப் போன்று கனவு வந்தால், நாம் ஏதோ ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து தப்பித்துவிட்டோம் என்று அர்த்தம்.
கெட்ட கனவுகள்:
· கனவில் பணம் வாங்கினால் துன்பத்திற்கு உள்ளாக நேரிடும் அல்லது நோய் வாய்ப்பட நேரிடும் என்று அர்த்தம்.
· வீட்டில் விறகு அடிக்கியிருப்பது போன்றோ அல்லது விறகு சம்பந்தமான கனவு வந்தால், வீட்டில் அல்லது வெளியில் சண்டை வரும்.
· தண்ணீரில் நீந்துவது போன்ற கனவு - வாழ்கையில் இன்னும் போராட வேண்டியிருக்கிறது அல்லது ஏதோ ஒரு போராட்டத்தில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.
· பெரிய பள்ளத்தில் அல்லது குழியில் இருப்பது போன்றும் எப்படி வெளியில் வரப்போகிறோம் என்று எண்ணினால், சிக்கலான பிரச்சினையில் இருக்கிறோம் சமாளிப்பது சற்று கடினம் என்று அர்த்தம்.
· மேட்டுப் பகுதியில் இருந்து பள்ளத்தில் விழுந்தால், படு தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்று அர்த்தம்.
· சாப்பிடுவது போன்ற அல்லது தலை குளிப்பது போன்ற கனவு - நாம் நோய் வாய்ப் பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
· வாந்தியெடுப்பது அல்லது வாயிலிருந்து ஏதோ எடுத்தல் – அதிகமான துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருக்கிறது.
· நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் நமது வீட்டில் சாப்பிடுவது போன்ற கனவு - அவர்களுக்கும் நமக்கும் விரோதம் ஏற்படும்.
· அரிசி வீட்டில் கொட்டிக் கிடத்தல் - கெட்ட செய்தி வரப்போவதற்கான அறிகுறி.
· தேர்வு எழுதுவது போன்ற கனவு - பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் வலுக்கிறது.
· கனவில் திருமணம் நடந்தால்- துயர செய்தி, துயர சம்பவம்.
· கனவில் அடுத்தவர்களுக்கு நமது கையில் உள்ள பாலைக் கொடுத்தால், நமது வீட்டுச் செல்வம் நம்மை விட்டுப் போகிறது என்று அர்த்தம்.
· கனவில் அடுப்பு எறிந்தால், வீட்டில் சண்டை.
· புது வீடு கட்டுதல், மரம் சாய்தல் மற்றும் வீடு இடிதல் - இழப்பிற்கு அறிகுறி.
· கனவில் தலை முடி கொட்டுதல் அல்லது வழுக்கைத் தலை - நமக்கு மிகப்பெரும் அவமானம் மற்றும் நஷ்டம் வரப்போகிறது.
· கனவில் இனிப்பு, வேர்கடலை மற்றும் மீன் சாப்பிடுவது அல்லது இவைகள் கண்ணுக்குத் தென்படல் - நோய்க்கு அறிகுறி.
· தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருள் இருந்தால், கொடிய நோய்கள் வரப்போகிறது என்று அர்த்தம்.
· பல் அடி படுவது, மற்றும் மலம் அல்லது சிறு நீர் கழிப்பது - அவமானங்கள் மற்றும் துன்பங்கள் வருகிறது.
· கனவில் கையெழுத்து போடுவது - பெரிய துன்பம் வரும்.
· இறந்தவர்கள் நம்மை அழைத்து, நாம் வருகிறோம் என்று சொன்னால், நமது உயிருக்கு ஆபத்து.
· வாகனங்களில் ஏறுவது போன்ற கனவு - நோயின் வழியில் பயணம் செய்கிறோம்.
· காட்டில் இருப்பது போன்று கனவு வந்தால், பிரச்சினைகள் மத்தியில் வாழ்கிறோம் என்று அர்த்தம்.
· தேரை அல்லது ஆமை வீட்டில் நுழைதல் - தொடர்ச்சியான கொடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
சில உண்மைக் கனவுகளும் அதன் பிறகு நடந்த சம்பவங்களும்:
எனது பாட்டியிடம் இந்த கனவுகளுக்கு அர்த்தம் கூறுவது பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது. “நாம் பல கனவுகளைக் காண்கிறோம். ஆனால் தூங்கி எழுந்தவுடன் அனைத்தும் ஞாபகம் இருப்பதில்லை. ஒரு சிலது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது. அதுவும் நமது வாழ்க்கைக்குத் தொடர்புடையதாகவும் இருக்கிறது. அந்த கனவு தொடர்பான சம்பவங்கள் பல வருடங்கள் கழித்து நடந்தாலும் அந்த கனவிற்கான அர்த்தம்தான் அந்த சம்பவம் என்றும் தெரிகிறது. அது போலத்தான் என் தோழி, கனவில் யாரோ ஒருவர் அவளிடம் வீட்டில் எரியும் ராந்தல் விளக்கைக் கேட்டதற்கு தர மறுத்திருக்கிறாள். ஆனால் அவர் வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். அவள் விழித்து எழுந்த பிறகு ‘ஐயோ ! விளக்க கொடுத்திட்டேனே, என்ன நடக்கப் போகப்போகுதோ !‘ என்று புலம்பினாள். நாங்கள் எல்லாரும் அவளிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னோம்.
ஆனாலும் அவள் பயந்ததுபோலவே நடந்தது. அவர்களது தோட்டத்தில் மோட்டார் திருட வந்தவனை அவளது மகன்கள் அடிக்கபோய் எதிர்பாராத விதமாக அவன் இறந்துவிட்டான்.அதனால் அவளது மகன்கள், சிறை தண்டனை பெற்றனர். அவர்களது குடும்பம் சின்னாபின்னமாகிவிட்டது. இப்போது அவர்கள் விடுதலை பெற்றாலும், அவரவர்கள் வெவ்வேறு இடங்களில் உள்ளனர். கனவில் எரியும் விளக்கைக் கொடுத்தால் குடும்பம் இருட்டாகும். இப்போது அதுதான் நடந்துள்ளது.” என்று ஒரு உண்மைக் கதையைக் கூறினார். மேலும் பல உண்மைச் சம்பவங்களைக் கூறினார்.
எனது அம்மாவும், தான் கண்ட பல கனவுகளுக்கு அர்த்தங்கள் கூறுவார். அது நடந்தும் இருக்கிறது. அவற்றில் ஒன்றை சொல்கிறேன். என் அம்மாவின் உடன் பணியாற்றிய ஒரு ஆசிரியையின் தலையில் இரும்பு கிரீடம் வைத்து இருப்பது போன்று கனவு கண்டார். காலையில் எழுந்தவுடன் என்னிடம் தான் கண்ட கனவைக் கூறி அவர்களுக்கு ஏதோ கொடிய நோய் வரப்போவதாகத் தெரிகிறது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். நான் அதை ஏதோ உளறுகிறார்கள் என்று விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். ஆனால், சில நாட்களில் அந்த ஆசிரியை மிகுந்த தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதித்தபோது அவருக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்தார்கள். அவர் ஒரளவு குணமடைய ஐந்து வருடம் ஆனது.
ஒரு புறம் சிலருக்கு மறைமுகமாக கனவுகள் வரும்போது, சிலருக்கு நேரடியாக நடக்கப் போகும் நிகழ்வுகள் அப்படியே கனவில் வந்துகொண்டிருக்கிறது. என் அப்பா நான் பத்தாம் வகுப்புத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுப்பதுபோல் கனவு கண்டதாக தேர்வு முடிவுகள் வரும் நாளன்று கூறினார். முடிவுகளைப் பார்த்தப் பிறகு எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அவர் கண்டது போலவே நானும் 430 மதிப்பெண்கள் பெற்றேன். மேலும் பனிரெண்டாம் வகுப்பிலும் 1090 மதிப்பெண்கள் பெருவதுபோல் கனவு கண்டதாக கூறினார். அதுவும் நடந்தது. இதைப் போல் எனது வாழ்க்கையிலேயே பல கனவுகள் உண்மையாக நடந்துள்ளன.

நான் கூற வருவது:

என்னதான் கனவு கண்டாலும், அதுவே நடக்கும் என்பது நிச்சயமில்லை. அதனால் மோசமான கனவுகள் வந்தால் அதை நினைத்து பயப்படாமல் துணிந்து நின்று வாழ்க்கையை எதிர் கொள்ளவேண்டும். இந்த கட்டுரை இப்படிபட்ட கனவுகளுக்கு, இப்படிப்பட்ட அர்த்தங்களைக் கூறிவருகிறார்கள் என்று சொல்ல எழுதப்பட்டதே தவிர யாரையும் பயமுறுத்துவதற்காக எழுத்தப்பட்டது அல்ல. மேலும் இதில் உள்ள கனவுகள் கண்டால் அதில் உள்ள அர்த்ததைப் போன்றே வாழ்கையில் நடக்கும் என்று கூறி உங்களை அச்சுறுத்தவும் இந்த கட்டுரையை நான் எழுதவில்லை. எனவே “நான் இந்த கனவு கண்டேன், என் அவ்வாறு நடக்கவில்லை?” என்று என்னை கேட்காதீர்கள். நன்றி.

Popular post